முறையாக குப்பையை அகற்ற பயனுள்ள குறிப்புகள்

நாம் கழித்திடும் குப்பைகள் இந்த பூமியில் மக்குவதற்கு வெவ்வேறு காலங்கள் ஆகும். உதாரணமாக, ஒரு காகிதம் மக்குவதற்கு 2 வாரங்கள் ஆகும், ஒரு ஆரஞ்சு பழத்தின் தோல் மக்குவதற்கு 6 மாதங்கள் ஆகும், ஒரு ரப்பர் மக்குவதற்கு 70 ஆண்டுகளும், ஒரு நெகிழி கோப்பை மக்குவதற்கு 500 ஆண்டுகள் வரையும் ஆகும்.

நமது அன்றாட குப்பைகளை எவ்வாறு அகற்றுகிறோம் என்பதற்கு நாமே பொறுப்பு. குப்பைகளை முறையாக அகற்ற சில பயனுள்ள குறிப்புகள்:

அகற்றும் முறைகள் 
  1. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும்
  2. அன்றைய குப்பைகளை அன்றே கழித்திட வேண்டும்
  3. திடமான குப்பைகளை திரவ குப்பைகளோடு சேர்க்க கூடாது
  4. சானிட்டரி பேட் மற்றும் குழந்தைகளின் டயாபர்களை காகிதத்தில் சுற்றி போட வேண்டும்
மறு சுழற்சி சாத்தியமா என சிந்திப்போம்
  1. மீதமான உணவை அருகிலுள்ள மாடு அல்லது தெரு நாய்களுக்கு கொடுக்கலாம்
  2. பயன்படுத்திய பொம்மைகள், உடைகள் போன்றவற்றை தூக்கி எறிவதை விட தானமாக கொடுக்கலாம்
  3. தினப்படி சமையல் அறையில் உருவாகும் கரிம கழிவுகளை உரமாக மாற்றலாம்
  4. காகிதங்கள், அலுமினிய கேன்கள், அட்டை போன்றவற்றை மறு சுழற்சி செய்யலாம்
பாதுகாப்பான கழிவு நீக்கம் 
  1. காலாவதியான மருந்துகள் மற்றும் உணவை உடனடியாக அகற்ற வேண்டும்
  2. உடைந்த கண்ணாடி, மின்னணு கழிவுகள் போன்றவற்றை பரிந்துரைக்கப்பட்ட முறையில் அகற்ற வேண்டும்

சரியான முறையில் பிரித்து அகற்றாத குப்பைகள் நம் பூமியில் மக்காமல் தங்கி விடுகிறது. நம் அன்றாட உணவு அதே பூமியில் இருந்துதானே வருகிறது? குப்பைகளை அகற்றும் முறையை அறிந்து நம் பூமியை சுகாதாரமாக வைப்போம் என்று இன்றே உறுதி ஏற்போம்.