வீதிகள் கழிப்பறைகள் அல்ல

நம் நாட்டுக்கு இப்போது எது தேவை? பொருளாதார வல்லமையா? விண்வெளி சாதனைகளா? அல்லது தரமான கல்வியா? அனைத்துமே “வேண்டும்” என்ற கோட்பாட்டுக்குள் தாராளமாக வரும். ஆனால் உண்மையில் எது தேவை தெரியுமா? சுத்தம்; சுகாதாரம்; சுவாசிக்க அசுத்தமில்லா பிராணவாயு, இவைகளே! இதைத்தான் நம் முன்னோர்கள் அப்போதே சொல்லிவைத்தார்கள் – “கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்று. ஆனால் நாம் அப்படித்தான் நடந்துகொள்கிறோமா?

கொஞ்சம் புள்ளிவிவரங்களை எடுத்து அலசுவோம். உலகெங்கும் 260 கோடி மக்களுக்கும் மேல் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். அதிலும் 60 கோடி பேருக்கும் மேல் இந்தியாவில் இருக்கிறார்கள். திறந்தவெளியில் கழிக்கப்பட்ட மலத்தை அள்ள 7 லட்சம் வண்டிகள் தேவைப்படும் என்று தலைசுற்ற வைக்கிறது அடுத்த புள்ளிவிவரம்.

இது மலம் கழித்தல் மட்டுமே. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதையும் எச்சில் துப்புவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் என்னவென்று சொல்வது! இது இந்தியா அல்ல; சிங்கப்பூரோ அல்லது ஆஸ்திரேலியாவோ என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்களால் இப்படி பொதுவெளியில் உங்கள் உடற்கழிவை வெளியேற்ற முடியுமா? சிங்கப்பூரில் பொதுவெளியில் முதல் முறை சிறுநீர் கழித்தாலே ரூ.70,000 அபராதம்! அடுத்தடுத்து அதே தவறை செய்யும்பட்சத்தில் அபராதத்தொகை விண்ணைமுட்டும் அளவுக்கு உள்ளது.

நாம் ஏன் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும்? நம் வீட்டையே எடுத்துக்கொள்வோமே. வீட்டில் கழிப்பறை உள்ளவர்கள் எத்தனை பேர் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கிறார்கள்? ஏன் இதுபோன்ற ஒரு மனநிலை நம்முள் வருகிறது? நாட்டையும் வீட்டையும் வெவ்வேறாக பார்ப்பதனால் தான் இந்த பாகுபாடெல்லாம்! 

உலகிலேயே அதிக குழந்தைகளை கொண்ட நாடு நம் பாரதம். இதில் 1 முதல் 5 வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் விஷக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறார்கள். ஓர் ஆண்டுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம்! இதற்கு காரணம் யார்? நாம் தான்! இந்திய குழந்தைகள் சராசரிக்கும் குறைவான வளர்ச்சியை பெறுகிறார்கள் என்பதற்கு திறந்தவெளி கழிவு வெளியேற்றமே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அரசாங்கம் தொடர்ந்து சுகாதாரத்தின் முக்கியத்தை உணர்த்திய வண்ணமே உள்ளது. லட்சக்கணக்கில் கழிப்பறைகளை கட்டித் தந்திருக்கிறது. மக்கள் மனதில் இது தவறு என்கிற எண்ணம் வந்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும். நம் உடல் கழிவுகளின் மூலம் நமக்கும் பிறருக்கும் எத்தனை தொல்லைகள் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

வீதிகள் கழிப்பறைகள் அல்ல என்பதை உணருவோம். நம் சுகாதாரத்தை நாமே பேணுவோம்.